Tuesday 31 December 2013

Monday 19 August 2013


  நேற்று (19.08.2013) 

MAAC ANNANAGAR (ANNANAGAR (CHENNAI) CENTRE OF MAYA ACADEMY OF ADVANCED CINEMATICS) 

நடத்திய புகைப்படப் போட்டியில்

 என் மகள் சந்தியா ரமணி 

பரிசு பெற்ற காட்சி.


  







என் மகள் எடுத்த பரிசுக்குரிய புகைப்படம்



Saturday 17 August 2013

அரசு கஜானா





அரசு கஜானா
நிரம்பி வழிந்தது
கண்ணம்மா,
பொன்னம்மா,
சின்னம்மாக்களின்
தாலிகள்
அடகுக் கடைக்குப்  
பாடம் படிக்கப்

போனதால்


Thursday 15 August 2013

சுதந்திர தின வாழ்த்துக்கள்.






இந்தியனாகப் பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.


அடுத்து ஒரு பிறவி இருந்தால் அதுவும் இந்தியனாகவே பிறக்க ஆசைப் படுகிறேன். 

Wednesday 7 August 2013

ரமலான் வாழ்த்துக்கள்.


ரமலான் நல் வாழ்த்துக்கள்.



நேற்று மாலை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.   எப்பொழுதும் ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஒரு தோழி என் அருகில் வந்து அமர்ந்தார்.   வலது கையில் மருதாணி இட்டுக்கொண்டிருந்தார்.  ‘என்னப்பா, உங்க ஆபீஸ்ல மருதாணியெல்லாம் இட்டு விடறாங்களான்னு கேட்டேன்.  ‘இல்லை என்னோட 16 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அவர் மனைவி மருதாணி இட்டு விட்டார்.  ரொம்ப வருடங்களாக ரம்ஜானுக்கு 2 நாட்கள் முன்பு அவர்கள் வீட்டுக்குச் செல்வேன்.  தீபாவளிக்கு அவர்கள் என் வீட்டிற்கு வருவார்கள்.என்று சொன்னார்.   கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம்.  எம்மதமும் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருக்கலாமே. 
அனைத்து இஸ்லாம் தோழர், தோழியர் அனைவருக்கும் மனமார்ந்த ரமலான் வாழ்த்துக்கள்.

Saturday 20 July 2013

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகையில் வெளி வந்திருந்த கதைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.

ஏற்கனவே ஊடகங்கள் முழு மூச்சுடன் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.   இது போன்ற கதைகள் குழந்தைகளுக்குத் தேவையா?

படித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.






ஏமாற்றுப் பணம்


ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு சாமியார், தரையில் துண்டை விரித்து, சில சீட்டுகளைப் பரப்பினார்.  கூட்டம் கூடி வர, ‘பக்தர்களே...உங்களுக்கு மாபெரும் நற்செய்தி!  இதோ என்னிடம் பாவமன்னிப்பு சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன.  ஒரு சீட்டு நூறு ரூபாய்!  நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்..நிச்சயம் சொர்க்கத்தில் இடம் உண்டு.  இதுதான் அதற்கான நுழைவுச் சீட்டு! என்று கூவினார்.  எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு சீட்டை வாங்க, பணம் குவிய, சாமியாருக்கு ஒரே குஷி.
     அடுத்தபடியாக, ‘என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது.  நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்த சீட்டின் விலை இருநூறு ரூபாய்என்று சொல்லி அதையும் விற்று பணத்தை அள்ளினார் சாமியார்.
     சாமியார் புறப்பட எத்தனித்த சமயத்தில் வந்து சேர்ந்த ஒருவன், இரண்டு சீட்டுகளையும் வாங்கிய கையோடு, கத்தியைக் காட்டி மிரட்டி,மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.  அப்போது, ‘உனக்கு நரகம்தான்என்று சாமியார் சாபம் விட, ‘நான் தான் இருநூறு ரூபாய் சீட்டையும் வாங்கிட்டேனே.  உன் சாபம் பலிக்காது!என்றபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தான்.
குறுக்கு வழியில பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார்களோ?

*****

அநியாய வட்டி அழிவைத் தரும்!

     ஓர் ஊரில், ஒரு பேராசைக் கிழவி இருந்தாள்.  அவள் எப்போதுமே அநியாய வட்டிக்குத்தான் கடன் கொடுப்பாள்.  பக்கத்து ஊர்க்காரர் இருவருக்கு பணநெருக்கடி வரவே, கிழவியைத் தேடி வந்தார்கள்.  “நூறு ரூபாய்க்கு, மாசம் 20 ரூபா வட்டி, முதல் மாத வட்டியை எடுத்துக்கிட்டு தான் பணம் தருவேன்என்று கறாராக சொன்னாள் கிழவி.
     இவ்ளோ வட்டியா... இது அநியாயம்... எனக்கு கடனே வேண்டாமென்று!ஒருவன் விலகி நிற்க, அடுத்தவனோ, எதையும் யோசிக்காமல் கடனை வாங்கிக் கொண்டான்.
     வெளியில் வந்த்தும், :ஏண்டா இப்படி அநியாய வட்டிக்கு கடன் வாங்கினே? இப்போ பாரு... உனக்கு இருபது ரூபா நஷ்டம்!என்று ஒருவன் சொல்ல...
     அட போப்பா! எனக்கு இருபது ரூபாதான் நஷ்டம் ... அந்த கிழவிக்கு எண்பது ரூபா நஷ்டம்.  நான் அசலை திருப்பிக் கொடுத்தாதானே!என்றான் மற்றவன்.

 ஏமாற்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்களோ?

*****

பிசினாரித்தனம் கூடாது!.

     ஒரு கஞ்சன் வீட்டுக்கு, இன்னொரு கஞ்சன் விருந்துக்குப் போனான்.  விருந்தில் ரசம் ஊற்ற, அதை சாப்பிட்டுவிட்டு செம சூப்பர்!என்றான்.  வீட்டுக்கார கஞ்சன் சொன்னான், “எங்க பலசரக்குக் கடையில் மிளகை அள்ளி அள்ளி வியாபாரம் செஞ்ச பிறகு, கையை கழுவுன தண்ணியில செய்த ரசம்தான் இது... அதான் இவ்வளவு ருசியா இருக்கு!என்று.  இதைக் கேட்டவுடன் விருந்துக்கு வந்த கஞ்சன் டென்ஷனாகி, “அடப்பாவிங்களா! இப்படி மிளகுத் தன்ணிய யாராவது முழுவதும் வீண் செய்வாங்களா? ஒரேயடியா ஒரே நாளில் இப்படி கையை கழுவுனதுக்கு பதிலாக, ஒரு நாளைக்கு ஒரு விரல் வீதமாக, அஞ்சு நாளைக்கு ரசம் வெச்சுருக்கலாமேஎன்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
     சிக்கனம், கஞ்சத்தனம், பிசினாரித்தனம் ஆகிய மூன்றுமே வேறு வேறு!
சிக்கனம் சீர்மை தரும்... கஞ்சத்தனம் சீரழிவைத்தரும்... பிசினாரித்தனம் பிசாசையே கூட்டி வருமாம்.!

 என்ன ஒரு தத்துவம்


*****

குலப் பெருமை!
ஓர் ஊரில், ஒரு புளுகுமூட்டை இருந்தான்.  அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான்.  இதைப் பெருமையாக வேற நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான்.  ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு... ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன் வளர்ந்தான் அவனுடைய 12 வயது மகன்.  இது, அப்பன்காரனை ரொம்பவே வெசனப்பட வைத்த்து, “ஐயோ, புளுகத் தெரியாக இப்படித் தறுதலையா திரியுறானே! நம்ம் குடும்பத்துப் பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே! என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான்.
அப்பா அடித்து விட்டாரே...என்கிற கவலையிலும், யோசனையிலும் மகன் மூழ்கிக் கிடக்க, அவனைப் பார்க்க அப்பன்காரனுக்கு பாவமாகிவிட்ட்து.  பையனை குஷிப்படுத்துவதற்காக, தன் தோள் மீது அவனை உட்கார வைத்துக் கொண்டு, அடுத்த ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான்.
வழியில் ஆறு குறுக்கிட, தண்ணீரில் இறங்கி அதைக் கடக்க ஆரம்பித்தான்.  அப்போது, தண்ணீரிலிருந்து ‘டப்என்றொரு சத்தம்.
‘என்னடா சத்தம்?
ஒண்ணுமில்லேப்பா!தண்ணியில ‘டப்னு கைய விட்டேன்.  மீன் மாட்டிக்கிச்சு.  அதை அப்படியே பொரிச்சுத் தின்னுட்டேன்!.

மகன் இப்படி சொன்னதைக் கேட்ட்தும்... “ஆகா நம்ம குலப்பெருமை அழியாதுடா மகனே!என்று சந்தோஷத்தில் ஆட்டம் போட்டான் அப்பன்.
 பிள்ளை புளுகவில்லை என்று வருத்தப்படும் அப்பா.
ரொம்ப அருமை.


*
***
*****
***
*

Wednesday 29 May 2013

HOME SWEET HOME

இல்லம் இனிய இல்லம்.

பகுதி 2.

கல்யாணம் பண்ணிப்பார்
வீட்டைக் கட்டிப்பார்


         பழமொழி எல்லாம் சும்மா இல்லீங்க.   பெரியவங்க எல்லாம் வாழ்ந்து, அனுபவித்து சொன்ன அனுபவ மொழிகள் பழமொழிகள்.


         என்னுடைய சின்ன வயசு காலங்கள்ள எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொந்த வீடெல்லாம் குதிரைக்கொம்புதான்.  நானும் திருமணம் ஆகிறவரை இருந்தது வாடகை வீடுகளில்தான்.

                                     
         எங்க வீட்டுக்காரர் கொஞ்சம், இல்லை, இல்லை ரொம்ப துறுதுறு.  நினைச்சா அதை உடனே நிறைவேத்திடணும்.   எங்க திருமணம் முடிந்ததும் நாங்க குடியிருக்க ஏற்பாடு செய்த வீட்டை (வாடகை வீடு தான் சொந்த வீடு கூட இல்லை), திருமணத்திற்கு முன்பே அவரே தனியாக வெள்ளையடிச்சு இருந்தார்ன்னா பார்த்துக்கங்களேன்.


    ஒரு நாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து 4, 5 நண்பர்கள் வீடு கட்ட நிலம் வாங்கப் போகிறோம், வண்டலூரில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தாம்பரத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம், மண்ணிவாக்கம் என்னும் இடத்தில்.  நீங்களும் வாங்கன்னு சொல்லி என் வீட்டுக்காரரையும் அழைத்துக் கொண்டு போனார்கள் (NOTE THE POINT -  நான் போகவில்லை). போனவங்க முதல்ல ஒரு ஐயர் கையால பணம் கொடுக்கணும்ன்னு சொல்லி ஆயிரம் ரூபாய் முன்பணம் என் வீட்டுக்காரரை கொடுக்கவைத்து விட்டனர்.  உருட்டி பிரட்டி, தேத்தி 26,000 ரூபாய்க்கு 2 கிரவுண்டுக்குக் கொஞ்சம் கம்மி, இடத்தை வாங்கிட்டோம்.

        
                   என்னை ஒரு நாள் அந்த இடத்தைப் பார்க்க என் கணவர் என்னை அழைத்துச் சென்றார். 

     ந்த இடத்தைப் பார்த்ததும் வயிற்றிலிருந்து ஒரு பந்து உருண்டு, தலைசுத்தி எனக்கு மயக்கமே வரும் போல ஆயிற்று.  ஆஹா இந்த இடத்தில் வீடு கட்டி, குடி வந்து, எப்படி வேலைக்குப் போய், பையனை படிக்க வைத்து, மலைப்பா இருந்தது எனக்கு.


         இந்த மாதிரிதான் இருந்தது அந்த இடம்.



      இந்த இடம் வேண்டாம் என்று என் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.  அப்படீன்னா ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்காது, பரவாயில்லையா?என்றார்.  1985 ல ஆயிரம் ரூபாய்ன்னா விட மனசு வருமா?   சரி ஏதோ இடம் வாங்கியாச்சு. அவர் வழிக்கே போவோம்ன்னு பேசாம இருந்துட்டேன்.

         அடுத்து வீடும் கட்ட ஆரம்பிச்சோம்.    அஸ்திவாரம் தோண்டியதும், அந்த மேஸ்திரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேலை நின்று விட்டது.  மூன்று மாதம் கழித்து மீண்டும் வேலையைத் தொடங்கினார் அந்த மேஸ்திரி.  ஆனால் அதற்குள் மழை பெய்து அஸ்திவாரம் நல்ல உறுதியா ஆயிடுத்து.   அஸ்திவாரம் போட்டு முடித்ததும் மறுபடியும் அந்த மேஸ்திரியால் வேலையைத் தொடர முடியாத நிலை.  பிறகு வேறொரு மேஸ்திரியைப் பிடித்து மீண்டும் தொடர்ந்தோம். 
                  
                                
தொடரும் இது தொடர்கதை போல தொடரும் 


என் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணியின் அன்புப் பரிசு.







Tuesday 28 May 2013

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

சென்னை வாசிகளே,

சுற்றுச் சூழல் மாசு பட்டுப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு இருக்கிறது.  அதற்கு பிராயச்சித்தமாக முடிந்தவர்கள் மரம் நடுவோமே.  மரக்கன்றுகளைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம்.  அதுவே உங்கள் வீடு தேடி வருகிறது.  எப்படி? ஒரே ஒரு குறுஞ்செய்தி போதுமே

மரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532


இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும். அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்.  குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள் என்கிறார்கள் சென்னை 'நாளந்தா' சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.

நம் வாழ்வு நம் கையில்


ஒரு முரடன் ஒரு முனிவரிடம், “ஐயா, என் மூடிய கையில் ஒரு பறவை இருக்கிறது.  அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா? என்று கேட்டான்.


அதற்கு முனிவர், அப்பா, அது உன் கையில் இருக்கிறதுஎன்றார்.

அதற்கு முரடன், “நான் அதைக்கேட்கவில்லை ஐயா, அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா, அதைச் சொல்லுங்கள்என்றான்.

முனிவர் சிரித்துக்கொண்டே “அது உன் கையில் தான் இருக்கிறதப்பாஎன்று சொல்லிவிட்டு நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.


அந்த முனிவருக்குத் தெரியாதா என்ன, பறவை உயிருடன் இருக்கிறது என்று சொன்னால், ஒரு நொடியில் அந்த முரடன் அதை நசுக்கிக் கொன்று விடுவான்.  இல்லை என்று சொன்னால் இதோ பாருங்கள் என்று பறக்கவிட்டு விடுவான்.   முரடன் வேறு வழியில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.


முரடனின் உள்ளங்கையில் இருந்த பறவை போல் நம் வாழ்வு நம் கையில்.  மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் அவரவர் எண்ணத்தைப் போல்.  

நட்புக்கு இனம், மதம், சாதி எதுவும் கிடையாது

தாய்மை

நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.   வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம்.  கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க.  அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது.  நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லைஎன்றார்.  நாங்கள் அசந்து விட்டோம்.   பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது.  அதன் முகத்தில் சொல்லொணா துயரம்.  மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”.   ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.



பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கமுடியுமா??

Friday 24 May 2013

சொன்னார் ஐயா சிவபெருமான்


விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது என் பெண் என்னிடம், ‘அம்மா, சிவபெருமானுக்கு தாய், தந்தை கிடையாது, அவர் சுயம்பு, தானாகவே தோன்றியவர் என்று சொல்வாயே, இந்த நேரத்தில் சிவபெருமான் இங்கு வந்தால் என்ன சொல்வார்?” என்று கேட்டாள்.

2 நிமிடத்தில் அதற்கு எழுதிக் கொடுத்ததுதான் கீழே கொடுத்திருக்கும் வரிகள்.  



இவனை மகனாகப் பெற
என்ன தவம் செய்தேன் என்றாள் ஒரு தாய்

இவள் வயிற்றில் மகனாகப் பிறக்க
என்ன புண்ணியம் செய்தேன் என்றான் மகன்.

பிள்ளைகள் அன்னையருக்குத் தந்த
பரிசுப் பொருட்களைக் கண்டு மயங்கவில்லை.
ஊர் கூடிப் பாராட்டிய போதும் அசரவில்லை.

ஆனால்
அன்னையின் கன்னத்தில் பிள்ளையும்
பிள்ளையின் கன்னத்தில் அன்னையும்
மாறி மாறி முத்தமிட்டபோது மட்டும்
மயங்கித்தான் போனேன் - லேசாக
பொறாமையும் கொண்டேன்.

எனக்கொரு தாய் இல்லை என்பது
வருத்தம்தான்
இருந்தாலும் பரவாயில்லை,
இவர்கள் அனைவருமே
என் பிள்ளைகள் தானே”
என்றான் தாயுமானவன்.

Thursday 23 May 2013

நூலகம்



 இந்தக் கவிதையை தனியார் நூலகம் நடத்தும் திரு சேதுராமன், நங்கநல்லூர், சென்னை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.


சின்னச் சின்னப் பிள்ளைங்களா,
சித்தெறும்புச் செல்லங்களா,
ஓடி வாங்க
உடனே ஓடி வாங்க


வண்ண வண்ணப் புத்தகங்கள்
வரிசையா வெச்சிருக்கேன்
வளமான எதிர்காலத்தை உங்களுக்கு
வாரி வழங்கக் காத்திருக்கேன்

பொது அறிவு
விஞ்ஞானம்
கணக்கு
புவியியல்
சமூகவியல்
சரித்திரம்
இன்னும் பலவகைப் புத்தகங்கள்
எண்ணிலா எண்ணிக்கையில்
அடுக்கி, அடுக்கி வைத்திருக்கிறேன்
எடுத்துப் படிக்க வாங்க

உங்க வீட்டுப் பெரியவங்களுக்காக
சிறுகதை
புதினம்
ஆன்மீகம்
பாட்டு
நாடகம்
இலக்கியம்
வகை வகையாய் புத்தகங்கள்
வாங்கித்தான் வைத்திருக்கேன்.

மகிழ்ச்சி
துயரம்
காதல்
சோகம்
மேலாண்மை
தத்துவம்
எல்லா வகைப் புத்தகங்களும்
வாரிவழங்கக் காத்திருக்கேன்

தேடித் தேடிப் படியுங்கள்
தினம் தினம் படியுங்கள்
நானே உங்கள் வீடு தேடியும் வருகிறேன்.
விரும்பி நீங்க ஏத்துக்கங்க.

சின்னதொரு வேண்டுகோள்
செவி மடுத்துக் கேளுங்க
செல்லரித்துப் போகாமல்
புத்தகங்களைப் படியுங்க
வீடு கொண்டு சென்றாலும்,
வீடு தேடி வந்தாலும்
மறக்காமல் மறுபடியும்
கொண்டு வந்து கொடுத்திடுங்க.

எத்தனையோ பொக்கிஷங்கள்
எல்லா நாட்டிலும் உண்டு.
பொன்னிற்கு நிகரான பொக்கிஷங்கள்
இந்தப் புத்தகங்களும் தானே.




Monday 20 May 2013

அன்பு, அரவணைப்பு, பாசம் இதெல்லாம் நமக்கு மட்டும் அல்ல. நாம் ஐந்தறிவு என்று சொல்லும் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் கூட உண்டு.

Tuesday 14 May 2013

ஆபிரஹாம் லிங்கன்


ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தனது  உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினாராம். ”மிஸ்டர் லிங்கன், உங்களைப் பல பேர் இங்கே பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்” என்று லிங்கனின் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினாராம்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.அது மட்டுமல்ல. இப்போழுதும் உங்கள் செருப்பு கிழிந்து போனால் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விசயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்” என்று ஒரு போடு போட்டாராம்.

Monday 13 May 2013

DIGITAL ART BY MY DAUGHTER

இது என் மகள் சந்தியா ரமணியின் DIGITAL ART

இதற்கு அவளுக்கு MAAC INSTITUTE CHENNAI இடமிருந்து இரண்டாம் பரிசு கிடைத்தது.


RECEIVING THE AWARD FROM 
Mr. PETE DRAPER, 
VISUAL EFFECTS SUPERVISOR, 
NAAN - E FILM