Tuesday 6 November 2012

பிறவிப்பயன்

 
ஏனுங்க, யாராவது கொஞ்சம் தயவு செஞ்சு என் கதையக் கேளுங்களேன். ஒரு 5 நிமிஷம்தான். அதுக்கு மேல நேரம் எடுத்துக்க மாட்டேன். வாங்க அம்மணி, உக்காருங்க. ரொம்ப நன்றிங்க.

நமக்கு சொந்த ஊர் கோயம்புத்தூருங்க. அங்க மில்லுல பொறந்தோமுங்க. அங்க இருந்து சென்னைக்கு வந்து சேந்தோமுங்க. எங்கன்னு கேக்கறீங்களா? அதாங்க தி,நகர் ரங்கநாதன் தெருவில இருக்கே பெரிய அண்ணாச்சி கடை அங்கதானுங்க. அதுக்கப்புறம் என் பயண அனுபவத்தை விவரமா சொல்றேன். கேளுங்க.

***

மில்லுல எங்களையெல்லாம் ஒரு லாரில ஏத்தி அனுப்பி வெச்சாங்களா. ஒரு வழியா சென்னைக்கு வந்து சேந்தோமா.

“அப்பாடா விடுதலை கிடைச்சாச்சு. 10 நாளா எங்க எல்லாரையும் சேர்த்துக்கட்டி, அட்டை பெட்டிக்குள்ள அமுக்கிப்போட்டு, அம்மாடி, இப்பதான் மூச்சு விட முடியுது.

ஆ! தலை சுத்துதே”

“ஏய் விமலா பாத்துடீ. கீழ போட்டுட்டியே. அந்த மேனேஜர் பார்த்தா கத்துவான். சீக்கிரம் எடுத்து அடுக்கி வெச்சுடு.”

“கலா இந்த கலர் ரொம்ப அழகா இருக்கு இல்ல.”

“ம்ம். உன்னோட கல்யாணத்துக்கு வாங்கிக்கோ”

“ம். அதைப்பத்தி நினைக்கிற நிலைமையிலா நாம இப்ப இருக்கோம்”

இப்படி இந்த பொண்ணுங்க பேசறதை தினமும் கேட்டுக்கிட்டிருந்தேனுங்க. பாவங்க இந்த சின்னப் பொண்ணுங்க எல்லாம். சில சமயம் கிக்கிபிக்கின்னு சிரிச்சுப்பேசுங்க. திடீர்ன்னு அப்படியே மாறிடும். ஒண்ணுக்கொண்ணு ஆறுதல் சொல்லிக்கிட்டு என்னமோ வாழ்க்கை நடத்துதுங்க. அவங்க மூடுக்குத் தகுந்த மாதிரி என் மூடும் ஆயிடும்.

இப்படியே அந்தக் கடையிலேயே ஒரு ஆறு மாசம் இருந்தேனுங்க.

***

“ஏம்மா, அந்த ரெண்டு கட்டையும் இப்படி எடுத்து வைம்மா. எனக்கு ஒரு 100 வேணும். எனக்கு தேவையானத நானே பாத்து எடுத்துக்கறேன்” இப்படி கேட்டுக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க.

என்னையும் சேர்த்து எடுத்து வெச்சாங்க. என்னை எடுத்து வைக்கும்போது மட்டும் அந்த விமலா பொண்ணு கண்ணுல ஒரு சின்ன ஏக்கம் தெரிஞ்சுது. (இல்ல என்னோட கற்பனையா இது).

ஒருவழியா பில் போட்டு வாங்கி எங்க எல்லாரையும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாங்க அந்த அம்மா. அவங்க பொண்ணு கிட்ட பையைக் கொடுத்து ”ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு கவர்ல போட்டு தனியா ஒரு கட்டப்பைல அடையாளமா எடுத்து வை. கல்யாணத்தன்னிக்கு கேட்டதும் டக்ன்னு எடுத்துக் கொடுக்கணும்”ன்னு சொன்னாங்க.

அந்தப்பொண்ணும் கவர்ல போடும்போது என்னை மட்டும் எடுத்து தனியா வெச்சு ’அம்மா, அம்மா இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கு. அண்ணன் கல்யாணத்துக்கு தெச்சுக்கறேம்மா’ன்னு கேட்டுச்சு.. (அப்ப கற்பனை இல்லை. இந்தப் பொண்ணுக்கும் என்னை புடிச்சிருக்கு பார்த்தீங்களா?).

அதுக்கு அந்தம்மா, ‘நீ என்ன புடவையா எப்பவும் கட்டிக்கப் போற? ஒனக்கு வாங்கிக் கொடுத்த புடவையிலயே இருந்த ரவிக்கையைத்தான் தெச்சுக்கிட்டயே. அப்புறம் இது எதுக்கு? அப்புறம் இதுக்கு ஏத்தா மாதிரி புடவை கேப்ப. எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து வை”ன்னு சொன்னாங்க.

அந்தப் பொண்ணோட முகம் சின்னதா ஆயிடுச்சுங்க. எனக்கு ரொம்ப பாவமா இருந்ததுங்க. சின்னப் பொண்ணுதானங்க ஆசை இருக்காதா? என்ன இந்த அம்மணி சொந்தப் பொண்ணு கிட்டயே இப்படி கோவிச்சுக்கறாங்களே. வரப்போற மருமககிட்ட எப்டி பேசுவாங்களோ?

மறுபடியும் மூச்சு முட்டல். கிட்டத்தட்ட ஒரு மாசம் அந்தக் கட்டப்பைக்குள்ளயே இருந்தோமுங்க..

ஒருநாள் எங்க எல்லாரையும் கார் டிக்கில வெச்சு எடுத்துட்டுப்போனாங்க. இறங்கினா ஒரே சத்தம். மேள சத்தம். குழந்தைங்க விளையாடற சத்தம். பலவிதமான சத்தங்கள். ஓ, திருமண வீட்டுக்கு வந்துட்டோம். ஒரே ஒரு நாள் தாங்க அங்க இருந்தோம். மறுநாள் எங்க எல்லாரையும் பிரிச்சு ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பையில போட்டாங்க. தேங்காய், வெத்தல, பாக்கு கூடவே பட்சணம் வேற. ம். வாசனை ஜோர்தான். ஒவ்வொரு பையா எடுத்து ஒவ்வொருத்தர் கிட்ட கொடுத்தாங்க.

நான் போய் சேர்ந்தது யார்கிட்ட தெரியுமா? ஒரு ரெட்டை நாடி சரீர அம்மா கிட்ட. அவங்க கூட அவங்க வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். அவங்க என்னை கையில எடுத்து பார்த்துட்டு “ம் கலர் ரொம்ப நன்னாதான் இருக்கு. ஆனா எனக்குப் போறாதே. அழகா ஒரு பொண்ணைப் பெத்துண்டிருக்கலாம். ம் ரெண்டும் பையனா பெத்துண்டுட்டேனே’ன்னு சொல்லிட்டு என்னை அவங்க துணி அலமாரியில வெச்சுட்டாங்க. (இப்ப எனக்கு கர்வமே வந்துட்டுது. தப்புதாங்க).

நல்ல வேளை இங்க மூச்சு முட்டல. அதுல இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் பாருங்க, ராத்திரிதான் தெரிய வந்துது. அந்த அலமாரி இருந்தது அவங்க வீட்டு குளிர் சாதன வசதி செய்யப்பட்ட படுக்கையறையில. ஆஹா! குளு குளுன்னு ரொம்ப ஜாலிதான் போங்க. ஒரு ஆறு மாசம் அங்கதான் குடித்தனம்.

அப்புறம் அந்த அம்மா நவராத்திரி வருதுன்னு அலமாரியில என்னை மாதிரி சேர்த்து வெச்சிருந்த எல்லாரையும் எடுத்து வெளியில வெச்சாங்க. பழையபடி கவருக்குள்ள போயிட்டேன். இப்ப குளிர்சாதன அறையிலே இருந்து எங்களை வேற ஒரு அறையில கொண்டு வெச்சுட்டாங்க. அடுத்து யார் கிட்ட போய் சேர்ந்தேன் தெரியுமா?

அந்த அம்மா அவங்க வீட்டில வேல செய்யற கண்ணம்மாவுக்கு என்னை வெத்தல பாக்கோட வெச்சுக்கொடுத்தாங்க. கண்ணம்மாவோட வீட்டுக்குப்போனேனா, சின்ன குடிசை வீடுங்க. பாவம். அவங்க வீட்ல என்னை பத்திரமா வெச்சுக்க ஒரு பெட்டி கூட இல்லங்க. அவங்க பொண்ணு கிட்ட என்னை குடுத்தாங்க.

அந்தப் பொண்ணு, ‘அம்மா, அம்மா இதை நான் தெச்சுக்கறேம்மா, நல்லா இருக்கும்மா கலர்’ன்னு கெஞ்சிக்கேட்டாங்க. அதுக்கு அந்த கண்ணம்மா, ‘ம். இத்தை குடுத்ததுக்கு அந்தம்மா கட்டி பழசாப்போன பொடவையும் ஜாக்கெட்டும் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும். இதுக்கு கூலி குடுக்க நாம எங்க போறது. தெருக்கோடில இருக்கற தையற்காரனே 50 ரூபா கேக்கறான் ஜாக்கெட்டு தெக்க. இன்னா பண்றது. எதுனா பையில போட்டு வை. தீபாவளிக்கு யார் வூட்லனா போனஸ் குடுப்பாங்க இல்ல. அப்ப தெச்சு தரேன்” ன்னு சொன்னாங்க. இப்ப எனக்கு முன்ன மாதிரி கர்வம் இல்லைங்க. பின்ன என்னங்க, பிறவிப்பயன அடையாம இப்படி சுத்திக்கிட்டே இருந்தா? அதோட இந்த ஒலகத்தில ஒவ்வொருத்தரும் படற கஷ்டத்தைப் பாத்தப்புறம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க.

சரி. என் கதையை விடுங்க. முடிஞ்சா ஒரு 50 ரூபா இந்த கண்ணம்மாக்குக் குடுத்து ஜாக்கெட் தெச்சுக்க உதவுங்களேன்.

எங்க கிளம்பிட்டீங்க. ஏனுங்க அம்மணி. எனக்கு ஒரு பதில சொல்லிப்போட்டுத்தான் போங்களேன்.

1 comment:

  1. புடவை ஒன்று பேசுவது போல ஓர் அருமையான படைப்பு. படித்து மகிழ்ந்தேன்.

    மிகவும் ரஸித்துச் சிரித்து மகிழ்ந்த இடம்:

    //நான் போய் சேர்ந்தது யார்கிட்ட தெரியுமா? ஒரு ரெட்டை நாடி சரீர அம்மா கிட்ட. அவங்க கூட அவங்க வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். அவங்க என்னை கையில எடுத்து பார்த்துட்டு “ம் கலர் ரொம்ப நன்னாதான் இருக்கு. ஆனா எனக்குப் போறாதே. அழகா ஒரு பொண்ணைப் பெத்துண்டிருக்கலாம். ம் ரெண்டும் பையனா பெத்துண்டுட்டேனே’ன்னு சொல்லிட்டு என்னை அவங்க துணி அலமாரியில வெச்சுட்டாங்க.//

    ரெட்டை நாடி சரீரம் - அவர்களுக்கான புடவை + அட்டாச்சுடு ஜாக்கெட் துணி பற்றி ஓர் வர்ணனை என் கதையில் ....

    இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html
    தலைப்பு: மடிசார் புடவை பகுதி 1 / 2


    நேரமிருந்தால் படித்துவிட்டு கருத்துக்கூறுங்கோ... ப்ளீஸ்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete