Tuesday 23 October 2012

லயா வந்தாச்சு

எங்கள் பேத்தி லயாக்குட்டி நவராத்திரி நன்னாளில் எங்கள் வீடு வந்து சேர்ந்தாள்.   பிறந்து ஒரு மாதம் ஆன அவளின் சிரிப்பில் விளைந்தது இந்தக் கவிதை.



அவளாக சிரிக்கிறாள்
அழகாக சிரிக்கிறாள்
அர்த்தம் புரிந்து சிரிக்கிறாளா?
அதுதான் தெரியவில்லையே!
ஆழி சூழ் உலகத்திற்கு
அவள் வந்து சேர்ந்து
திங்கள் ஒன்றுதான் ஆகிறது
தாய் முகம் புரிந்திருக்குமோ?
தந்தை முகம் தெரிந்திருக்குமோ?
தாத்தா, பாட்டி இவர் தான் என்று
தங்கக்குட்டிதான் அறிந்திருக்குமோ?
அத்தையின் அழகு முகம்
அகமகிழ வைத்திருக்குமோ? 
தாயுமான இறைவன்
தாமரைப்பூ கொண்டுவந்து
காட்டும்போது குஞ்சிரிப்பு
கொவ்வைச் செவ்விதழில்
குழைந்து வருகிறதோ?
யாமறியோம் பராபரமே!

Monday 15 October 2012

தவிப்பு - ஜெ மாமி

 அறுசுவையில் வெளிவந்த என்னுடைய மற்றொரு கதை.
உங்களுக்காக இங்கு மீண்டும் பகிர்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/21416

தவிப்பு - ஜெ மாமி
வழக்கம் போல் பள்ளிக்கூட வாசலில் இறக்கிவிட்ட கணவர் காந்திநாதனிடம், “ஏங்க எவ்வளவு சொல்லியும் கேக்காம இப்படி செய்துட்டீங்களே! ஒரு வெள்ளிக்கிழமை இரவு சொல்லி இருந்தா கூட சனி, ஞாயிறு அவ கூட இருந்து அவள சமாதானப் படுத்தி இருப்பேனே! நாம ரெண்டு பேருமே விடுப்பு எடுக்க முடியாத இந்த நேரத்தில் சொல்லிட்டீங்களே! நீங்க சொன்னதைக் கேட்டதும் நம்ப மகள் யாழினியின் முகம் போன போக்கு, அந்தப் பரிதாபமான முகம், எனக்கு இப்பவும் வயிற்றைப் பிசையுதுங்க..... குழந்தை என்ன செய்வாளோ? ராத்திரி முழுக்க அவ தூங்கவே இல்லைன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு நாள் கூட காலையில 9 மணி வரைக்கும் அவ தூங்கி நாம பார்த்ததே இல்லையே. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க!” என்று பொரிந்து கொட்டினாள் அமுதா.

“இங்க பார் அமுதா, எனக்கு நம்ப மக மேல முழு நம்பிக்கை இருக்கு. நாம என்ன அவளை கோழையாவா வளர்த்திருக்கோம். அப்புறம் என்ன பயம். சரி நான் கிளம்பறேன், சாயங்காலம் நீ பேருந்தில வீட்டுக்குப் போயிடு. எனக்கு பள்ளியில் மாலை ஒரு கூட்டம் இருக்கு. நான் வர கொஞ்சம் நேரமாகலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் காந்திநாதன்.

கணவரின் பேச்சு ஓரளவு சமாதானப் படுத்தினாலும் இவரால் எப்படி இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது என்று யோசிக்க யோசிக்க சலிப்பாகவும் இருந்தது அமுதாவுக்கு.


                                                                                       ***

முதல் இரண்டு வகுப்புகளும் பனிரெண்டாம் வகுப்பு என்பதால் மும்முரமாக பாடம் எடுப்பதில் ஆழ்ந்து விட்ட அமுதா இடைவேளையில் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அது விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. மகளின் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ளவும்” என்று வந்த வாசகத்தைக் கேட்டதும் அமுதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனசு சரியில்லாததால் காலையிலும் சரியாக சாப்பிடவில்லை. வயிறு வேறு என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. இரண்டு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டு தலைமை ஆசிரியரைப் பார்த்து அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தபோதே பள்ளியின் ஆயா வந்து, “அமுதா அம்மா உங்கள தலைமை ஆசிரியர் ஐயா அவர் அறைக்கு வரச்சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அப்பொழுதே புரிந்து விட்டது அமுதாவிற்கு, கண்டிப்பாக அரை நாள் விடுப்பு எடுக்க முடியாது என்று. கணவரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்” என்றே குரல் வந்து கொண்டிருந்தது.

தலைமை ஆசிரியர் இட்ட பணிகளை முடித்துவிட்டு அவரிடம் அனுமதி பெற்று அமுதா கிளம்பிய போது மாலை மணி நான்கு ஆகி விட்டது. அப்பொழுதும் தொலைபேசியில் கணவரையும், மகளையும் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே அமுதா ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திற்குச் சென்றாள். நல்லவேளையாக அவள் செல்லவேண்டிய பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி அமர்ந்தாள் அமுதா.
இறைவா தயவு செய்து எங்கள் மகளை எங்களிடமிருந்து பிரித்து விடாதே. உன்னைத்தான் மலை போல் நம்பி இருக்கிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

குழந்தை பாவம் பள்ளி இறுதித் தேர்வில் 1200க்கு 1179 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவதாகவும் மாநிலத்தில் மூன்றாவதாகவும் வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியைக்கூட நீடிக்கவிடாமல் இப்படி செய்துவிட்டாரே என்று கணவரை நொந்து கொண்டாள். பாவம் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். எவ்வளவு சொல்லியும் இந்த நேரத்தில் சொன்னால்தான் அவளால் இந்த விஷயத்தை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டாரே என்று மனதிற்குள் புலம்பினாள் அமுதா.
அமுதா இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி வழக்கம் போல் நடந்து செல்லாமல் ஆட்டோவில் ஏறி வீட்டிற்குச் சென்றாள். வீட்டு வாசலில் கணவனின் இரு சக்கர வாகனம் இருப்பதைப் பார்த்ததும் என்ன ஆயிற்றோ என்று மனம் பதைத்து மாடிப் படிகளில் தனக்கு 58 வயது என்பதையும் மறந்து இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினாள். தன் இதயத் துடிப்பு அதிகமாவதையும் அவள் உணர்ந்தாள். அழைப்பு மணியை அழுத்தினாள். உடனே கதவு திறக்கப்படாததால் படபடவென்று கதவை தட்டினாள். அந்த இரண்டு நிமிட தாமதத்தைக்கூடப் பொறுக்க மாட்டாமல் பதறினாள்.

கதவைத் திறந்த கணவரிடம், “யாழினி எங்கே?” என்று பதற்றமாகக் கேட்டாள். “அம்மா” என்று அழைத்துக்கொண்டு வந்த யாழினி, “அம்மா நான் மொத மொதல்ல போண்டாவும், கேசரியும் செய்திருக்கேன். முகம் கழுவிட்டு வாங்கம்மா. நம்ப மூணு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்” என்று கூப்பிட, மகளைப் பார்த்து திரு திரு என்று விழித்தாள் அமுதா.

மகள் கையில் கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டு சாப்பிடாமல் கிட்டத்தட்ட அழும் நிலைக்கே போய் விட்டாள் அமுதா. அவள் அருகில் வந்து அமர்ந்த யாழினி, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “அம்மா, அப்பா என்கிட்ட நான் உங்களோட சொந்த மகள் இல்ல அனாதை இல்லத்தில இருந்து தத்து எடுத்து வளர்க்கிற வளர்ப்பு மகள்தான்னு சொன்னதும் ஆடித்தான் போயிட்டேன். கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல. அழுகையும் கோபமும் முட்டிக்கிட்டு வந்துச்சு. ஆனா நீங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்கு போனதுக்கப்புறம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேந்து நடந்ததையெல்லாம் யோசிச்சுப் பாத்தேன். அத்தோட அம்மா, நீங்களும் அப்பாவும் ராத்திரி நான் தூங்கிட்டேன்னு நினைச்சு பேசினதை நான் கேட்டேன். அம்மா உங்களை விட்டு நான் போயிடுவேன்னு எப்படிம்மா நினைச்சீங்க.
அம்மா நம்ப மூணு பேரையும் ஒண்ணா பார்க்கிறவங்க, உங்க மக யார் சாயல், உங்க ரெண்டு பேர் மாதிரியும் இல்லயேன்னு கேக்கும்போதெல்லாம் அப்பா அவ அப்படியே என் அம்மா தான். என் அம்மாவே எனக்கு மகளா வந்து பிறந்திருக்கான்னு சொல்லுவாரே. என்னயும் அம்மான்னு தானே கூப்பிடுவார். ஒரு அனாதைக்கு இவ்வளவு பெரிய கௌரவத்தை கொடுத்திருக்கிற இந்த அப்பாவை விட்டுப் போக எனக்கு எப்படி மனசு வரும்?.
நீங்க மட்டும் என்ன அம்மா. என்னை மருத்துவக்கல்லூரியில சேர்க்கணும்ங்கறதுக்காக இத்தனை வருஷங்களா உங்களுடைய சுகத்தை எல்லாம் குறைச்சுக்கிட்டு குருவி சேர்க்கற மாதிரி பணத்தை சேர்த்து வெச்சிருக்கீங்களே. வங்கியில கூட கடன் வாங்காம என்னை படிக்க வைக்கணும்ன்னு சொல்லுவீங்களே. உங்க ரெண்டு பேரோட உலகமே நான் தானே. இன்னிக்கு நான் இவ்வளவு மதிப்பெண் வாங்கினதுக்கு, நாளைக்கு உங்க எண்ணப்படியே மருத்துவர் ஆகப் போறதுக்கு, எல்லாத்துக்குமே நீங்க தானே காரணம். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்ங்கறதையே ஒரு லட்சியமா நினைக்கிற உங்களை விட்டு எப்படிம்மா........”

”அது வந்தும்மா! யாழினி! நான் வந்து.....”

“சரி விடுங்கம்மா, என்னைப் பொறுத்தவரைக்கும் என்றைக்குமே நீங்கதான் என் அம்மா, அப்பா. நான் போய் காப்பி போட்டுக்கிட்டு வரேன்.” என்று சமையலறைக்குச் சென்றாள் யாழினி.

“அமுதா”

“ஏங்க அது வந்து...”

“நீ என்ன கேக்கப்போறேன்னு புரியுது. காலையில இருந்து நம்ப தெருவில பராமரிப்புக்காக மின்வெட்டு. நம்ப பொண்ணோட கைப்பேசியில மின்னூட்டம் இல்லை. நம்ப பொண்ணு எண்ணை வாங்க கடைக்குப் போன சமயம் பார்த்து நீ வீட்டு தொலைபேசியில கூப்பிட்டிருக்க. என் கைப்பேசியில சிக்னல் கிடைக்கல. அதனால உன்னால என்னையும் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்திருக்கலாம். வெளியூர் போன அதிகாரி திரும்பி வராததால கூட்டமும் ரத்தாயிடுத்து. உன்னை மாதிரியே எனக்கும் மனசு கஷ்டமா இருந்தது. அதனாலதான் உன் பள்ளிக்கூடத்துக்குக்கூட வராம நேர வீட்டுக்கு வந்துட்டேன். இந்த விஷயத்தையெல்லாம் தொலைபேசியில தொடர்புகொண்டு உன் கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்ச போது நீயும் வந்துட்ட. போதுமா? இதுக்கு மேல ஒண்ணும் கேக்காம கேசரியையும், போண்டாவையும் சாப்பிடு,” என்றார் காந்திநாதன்.

காலையில் இருந்து தவித்த தவிப்பிற்கு ஒரு முற்றுப் புள்ளி வரவே நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமுதா இந்த சின்ன பெண்ணுக்கு இருக்கற முதிர்ச்சி கூட தனக்கு இல்லையே என்று வருந்தினாள்.
நெட்டில் ஏதோ தேடும் போது ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பார்க்க நேர்ந்தது.
இந்த நேரத்தில் கடன் வாங்கியவர்கள் அதில் சிறு தொகையை திருப்பி செலுத்தினால் கடன் விரைவில் தீர்ந்து விடும் என்று போட்டிருந்தது.  அப்பொழுது உதயமானதுதான் அறுசுவை.காமில் வெளி வந்த என்னுடைய இந்த  சிறுகதை. உங்களுக்காக இங்கு மறுபடியும் வெளியிடுகிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/19102

‘மைத்ர முகூர்த்தம்’


“ஏங்க, விஜிதா தாங்க பேசறேன். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அப்புறம் மறந்துட்டேன்னா கஷ்டம். ப்ளீஸ்”

“என்ன விஜி பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. சரி சரி சொல்லு. இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன். நம்ப ரெண்டு பேரும் முக்கியமான விஷயங்கள பேசிக்கறதே மதிய சாப்பாட்டு நேரத்தில தான. சரியான நேரத்தில தான் கூப்பிட்டிருக்க. நீ சாப்பிட்டுட்டயா?”

“நானும் இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன். அது வந்துங்க. இன்னிக்கு நெட்ல ஒரு விஷயம் பார்த்தேன். மைத்ர முகூர்த்தம்னு ஒரு நேரம் இருக்காம். இந்த நேரம் ஒரு தமிழ் மாசத்தில அதிக பட்சமா மூணு நாள் வருமாம். அந்த மூணு நாள்ல, ஒவ்வொரு நாளும் அதிக பட்சமா ரெண்டு மணி நேரம் வரை இருக்குமாம். இந்த நேரத்தில் நாம்ப வாங்கின கடன்ல அசல்ல ஒரு பங்கை திருப்பி செலுத்தணுமாம். அப்படி செலுத்தினா, கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சீக்கிரம் தீர்ந்துடுமாம்.”

”அதுக்கென்ன விஜி இப்ப”

“அது வந்துங்க, நாளைக்கு 09:45ல இருந்து 11:45 வரைக்கும் அந்த நேரமாம். இப்பவே சொன்னாதான நீங்க வங்கியில இருந்து பணத்தை எடுத்து வெச்சு நாளைக்கு கடன் அட்டை, வீட்டுக்கடன் எல்லாத்துக்கும் கட்ட முடியும். அதனால தாங்க போன் செய்தேன்.”

"அது எப்டி விஜி, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உன் கண்ணுல மட்டும் படுது. சரி சரி எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லயோ உனக்காக கண்டிப்பா செய்யறேன், சரியா”. என்று கைப்பேசி பேச்சை முடித்தான் ராகவன்.

                                                                                ***

ராகவனும், விஜிதாவும் வெவ்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தம்பதிகள். ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண் என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆண் குழந்தைக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் பெற்றோர். அன்பான, அளவான குடும்பம்.

அடிப்படையில் ராகவன் மிகவும் நல்லவன். ஆனால் சற்று செலவாளி. மேலும் கண்ணில் பட்டதை எல்லாம் சட்டென்று வாங்கிவிடும் பழக்கம் உள்ளவன். எதையும் நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். திருமணமான புதிதிலேயே தாம்பரத்தின் அருகில் 2 கிரவுண்டு நிலம் வாங்கி சொந்த வீடு கட்டி குடிபோய் விட்டனர். விஜிதா சொல்லச் சொல்ல கேட்காமல் மேன்மேலும் கடன் வாங்கி இரண்டு மாடியும் கட்டிவிட்டான் ராகவன்.
விஜிதா, “ஏங்க ஆனை அசைந்து திங்கும். வீடு அசையாமல் திங்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நீங்க இப்படி நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கற பணத்துல பெரும் பகுதியை வீட்டுலயே போடறீங்களே. கொஞ்சமாவது கையில காசு வேண்டாமா? புறநகர்ல இருக்கறதால வாடகையும் ரொம்ப கம்மியாதான் வருது. நம்ப பொண்ணும் பத்தாவது வந்துட்டா. நாம்ப வேற முதல்ல பொண்ண பெத்திருக்கோம். அவ கல்யாணத்துக்கு ஏதாவது சேக்க வேண்டாமா? இப்டி மாடி மேல மாடி கட்டறதுக்கு பதிலா எங்கயாவது ரெண்டு காலி மனை வாங்கி போட்டிருந்தாலும் கல்யாணத்தும் போது வித்துக்கலாம். பையன் ஆறாவதுதான் படிக்கறான்னாலும் அவன் படிப்புக்கும் செலவழிக்க வேண்டாமா? நமக்கு என்ன பூர்வீக சொத்துன்னு எதாவது இருக்கா? எதையுமே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே!”னு சொல்லிச் சொல்லி இப்பதான் ராகவனுக்கு கடனையெல்லாம் அடைச்சுட்டு கையில நாலு காசு வெச்சுக்கணும்ங்கற விஷயமே உறைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த நேரத்தில தான் விஜிதா மைத்ர முகூர்த்தத்தை பத்தி அவன் காதில் போட்டிருக்கிறாள்.
மறுநாள் காலையில் விஜிதா சொன்ன நேரத்தில் கிரெடிட் கார்டுக்கும், வீட்டுக் கடனுக்கும் பணத்தை செலுத்திவிட்டு வந்தான் ராகவன்.

                                                                               ***
6 மாதம் கழித்து ஒரு நாள் ராகவன் மும்முரமாக அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தபோது வரவேற்பு அறையில் அவனை சந்திக்க ஒருவர் வந்து காத்திருப்பதாக செய்தி வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வரவேற்பு அறைக்குச் சென்றான். 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ராகவன் அருகில் வந்ததும் இரு கை கூப்பி “தம்பி நீங்கதான் ராகவனா? உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்றார்.

ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தான் ராகவன். அவர், “தம்பி நான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன். ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தையெல்லாம் இந்த அலுவலகத்துல வேலை பார்க்கறவங்களுக்கு கடனா கொடுத்திருந்தேன். 4 வருஷம் முடிஞ்சு போச்சுங்க தம்பி. அசல்ல ஒரு பைசா கூட திரும்பி வரல. ஏதோ நீங்க சொன்னீங்களாம். ஒரு குறிப்பிட்ட நேரத்துல கொஞ்சம் அசலை செலுத்தினா சீக்கிரமா கடன் தீர்ந்துடும்னு. ஆறே மாசத்துல எல்லா பணமும் திரும்பி வந்துடுச்சு தம்பி. அடுத்த மாசம் என் பேத்திக்கு திருமணம் நடக்கப் போகுது. அவ குழந்தையா இருக்கும் போதே என்னோட ஒரே மகனும், மருமகளும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க. நான் தான் என் பேத்திய வளக்கறேன். அவ திருமணத்தை எப்படி சமாளிக்கப்போறேனோன்னு கலங்கி நின்னேன். நீங்க தான் தெய்வம் மாதிரி வந்து உதவி செய்திருக்கீங்க. நீங்க நல்லா இருக்கணும் தம்பி” என்று சொல்லிவிட்டு ராகவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் நன்றி சொல்லி விட்டு இனிப்புகள் அடங்கிய ஒரு பெட்டியை அவன் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.

”பரவாயில்லையே! வாங்கின கடன் தான அடையும்னு விஜி சொன்னா. குடுத்த கடனும் வசூலாயிடுத்தா.” என்று ஆச்சரியப்பட்டான் ராகவன். ஒரு வினாடி சுதாரித்து “அட மக்கு ஒருத்தருக்கு வாங்கின கடன்னா இன்னொருத்தருக்கு குடுத்த கடன் தானே. மகிழ்ச்சில இதுகூட எனக்கு புரியலயே” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
அதே போல் ராகவனிடம் அவனது அலுவலத்தில் பணிபுரியும் சிலர் தங்கள் கடன்கள் எல்லாம் அடைந்து விட்டதாகக் கூறி நன்றி தெரிவித்தனர்.
“அது சரி விஜிதா என் கிட்ட சொன்னது எப்படி இவங்களுக்குத் தெரிஞ்சுது. நான் யார் கிட்டயும் சொன்னதா தெரியலயே. ஓ நம்ப ஓட்ட வாய் ராமுதான அன்னிக்கு வங்கிக்கு கூட வந்தான். அவன் கிட்ட மட்டும் தானே நான் இந்த விஷயத்தை சொன்னேன். அவன்தான் எல்லாருக்கும் சொல்லி இருக்கணும். அவன் ஓட்ட வாயா இருக்கறதால நன்மையும் நடந்திருக்கே. ”.

                                                                                  ***

மாலையில் வீட்டிற்குள் நுழைந்த ராகவனிடம் விஜிதா, ”ஏங்க, நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்ங்க” என்றாள்.

ராகவன், “அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல இதப்புடி” என்று 2 புதிய புடவைகள் அடங்கிய பொட்டலத்தையும், இனிப்புகள் அடங்கிய பொட்டலத்தையும் கொடுத்து “விஜி இன்னிக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று சொல்லி அலுவலகத்தில் நடந்ததைச் சொல்லிவிட்டு “சரி நீ என்னவோ சொல்லணும்ன்னு சொன்னியே, இப்ப சொல்லு” என்றான்.

“அது ஒண்ணும் இல்லீங்க. உப்பு சப்பு இல்லாத சமாசாரம். இருங்க காபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக சமையலறைக்குள் சென்றாள்.

அவள் சொல்ல வந்து சொல்லாம போனது என்னன்னு நான் உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லட்டுமா? அது இதுதான். “ஏங்க. நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன். அன்னிக்கு மைத்ர முகூர்த்தம்ன்னு சொன்னேனே அது காலை 09:45ல் இருந்து 11:45 இல்லையாம். ராத்திரி 09:45ல் இருந்து 11:45 வரையாம்.”
காபியுடன் முன்னறைக்கு வந்த விஜிதா, அவர்கள் வீட்டு தொலைகாட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்த ”கறை படறதுனால நல்ல விஷயம் நடந்தால் கறை நல்லது தானே… ...” விளம்பரத்தைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.